திருநெல்வேலியில் 48 மணி நேரத்தை எப்படியெல்லாம் செலவு செய்யலாம்?

0
6497

திருநெல்வேலி என்றதும் உங்கள் அனைவருக்கும் அல்வாதான் நினைவுக்கு வரும். இருட்டுக்கடை அல்வாவை தன் வாழ்நாளில் ஒருமுறையாவது சுவைக்க வேண்டும் என கண்டிப்பாக ஒவ்வொருவரும் விரும்பிடுவீர்கள். நெல்லை என அழைக்கப்படும் திருநெல்வேலியைதான் இந்த வார வீக்-என்ட் சுற்றுலா பக்கத்தில் பார்க்கப் போகிறோம். வாருங்கள்…

அம்பாசமுத்திரம்:
காசி விசுவநாதர் கோயில், திருமூநாந்தசாமி கோயில், அம்மையப்பர் கோயில் மற்றும் வைணவக் கோயில்கள் என பக்தி மணக்கும் ஊராக திகழ்கிறது அம்பாசமுத்திரம். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய முல்லை நிலமும், அதன் மீது பல பண்டைய கோயில்களுமாக காட்சியளிக்கும் இந்த ஊர். நகரத்தை பார்த்து அலுத்துப் போனவர்களை இங்கே கூட்டிவந்தால் புத்துணர்ச்சி பெறுவார்கள்.

கூந்தன்குளம் சரணாலயம்:
நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து 35கி.மீ பயணித்தால் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் வரும். வெளிநாட்டுப் பறவைகள் பலவும் கடல் கடந்து இங்கு வந்து தங்கிச் செல்லும். குறிப்பாக ஜூன் மாதத்தில் சுமார் 35 வகையான பறவைகள் இங்கே முட்டையிட்டு குஞ்சு பொரித்து, பிறகு குடும்பமாய் பயணிக்கின்றன.

குற்றாலம்:
குற்றாலத்தின் பெரிய அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பழத்தோட்ட அருவி, புது அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன. எல்லா அருவிகளுக்கும் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளது. இந்த அருவிகளில் வரும் தண்ணீரில் மூலிகைக் குணம் கலந்திருப்பதால் இவற்றில் நீராடுபவர்களுக்கு எல்லா நோய்களும் தீரும்.

களக்காடு:
ஆரம்பத்தில் புலிகள் நடமாடிய பகுதி இது. புலிகள் சரணாலயம் எனப்பட்டாலும் இங்கே சிங்கவால் குரங்குகள் மற்றும் நீள வால் குரங்குகள் அதிகம் புழங்குகின்றன. பசுமை போர்த்திய அடர்ந்த வனமாக இருப்பதால் வனத்துறையினர் அனுமதியுடன் உள்ளே சென்று வரலாம்.

மாஞ்சோலை:
நெல்லையிலிருந்து 57 கி.மீ தூரத்தில் 1162 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களின் பகுதிதான் மாஞ்சோலை. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் 4000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் பல காட்சிகள் இங்கேதான் எடுக்கப்பட்டது.

நாங்குநேரி:
விவசாயம் தழைத்திருக்கும் ஊர் இது. காலையிலும் மாலையிலும் மயில்கள் வந்து விளையாடுவதை கண்டு ரசிக்க முடியும். சுற்றிலும் வயல்வெளிகள் நடுவே ஓர் அழகிய கிராமம் என்றால் அது நாங்குநேரிதான்.

கழுகுமலை:
சமண மதத்தின் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. சமணர்களின் சிற்பக் கலைத்திறனுக்குச் சிறந்த உதாரணம் இங்குள்ள கோயில்தான். சிவபெருமானுக்கென்று கட்டப்பட்ட குடைவரைக் கோயிலான வெட்டுவான் கோயிலும் இந்தக் கழுகுமலையில்தான் உள்ளது.

பாபநாசம்:
மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் இந்த தலம் அமைந்துள்ளது. அகத்தியருக்கு இங்கே கோயிலும் உண்டு. பாபநாசம் நீர்வீழ்ச்சியில் குளித்தால் பாவங்கள் எல்லாம் போகும் என்பது நம்பிக்கை.

முண்டந்துறை சரணாலயம்:
வனவிலங்கு சரணாலத்தின் பரப்பளவு 567 ச.மீட்டர்கள். இங்கு புலி, சிங்கவால் குரங்கு, கரடி, கேளை ஆடு, ஓநாய் போன்ற மிருகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வனத்துறை அனுமதி பெற்று வாகனத்தில் சுற்றிப் பார்க்கலாம். முண்டன்துறை வன ஓய்வகத்தில் உணவு மற்றும் உறைவிட வசதி உள்ளது.

வளநாடு சரணாலயம்:
தூத்துக்குடி பிளாக்பக் அருகே அமைந்துள்ள இந்தச் சரணாலயம் 16.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு சிங்கவால் குரங்குகள், புள்ளிமான்கள், காட்டுப்பூனை போன்றவை உள்ளன. இதைப் பார்வையிட எப்போது வேண்டுமானாலும் போகலாம்.

சென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்! ட்ரை பண்ணுங்க…

SHARE