வெளுக்க போகிறது கோடை மழை… எஞ்சாய் பண்ணுங்க மக்களே!

0
424

மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்று வீசவும், மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சித்திரை மாதம் அக்னி நட்சத்திர மாதம் என்பதால் கத்தரி வெயிலுக்கு முன்பாகவே ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழைப்பொழிவால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டிக்கொண்டிருக்கிறது. கோடைக்கு இதமாக பலரும் அருவிகளை தேடிச் செல்கிறார்கள்.

தற்போது மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் பகுதிகளில் அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக தேனீ, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தென் தமிழக மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் வட தமிழகத்தை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் மேல்ப்பகுதி மற்றும் அடிவாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 225 கன அடியில் இருந்து 2,320 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 225 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டிருக்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 113.60ஆக இருக்கிறது.