மினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி!

0
216948

குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்ட அளவு இல்லாத காரணத்தினால் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்துள்ளது எஸ்.பி.ஐ. வங்கி.

அதிரடி வங்கி:
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு ஊழியர்களையும் வாடிக்கையாளர்களாக கொண்ட ஒரே வங்கி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. மிகவும் பிரபலமான வங்கி, பெருவாரியான மக்களின் நம்பிக்கையையும் பெற்ற இந்த வங்கி பல அதிரடி நடவடிக்கைகளுக்கும் பேர் போனதுதான். கடந்தாண்டு பெருநகரங்களில் வசிக்கக்கூடிய தனது வாடிக்கையாளர்களின் இருப்புத் தொகையை ரூ. 5,000 வரை நிர்ணயித்தது.

வாடிக்கையாளர்கள் அதிருப்தி:
இந்த அதிரடி அறிவிப்பால் சாமானிய மக்களான வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த அறிவிப்பானது பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்ட சூழலில் வெளியாகியதால், பெரும் அவலம் ஏற்பட்டது. இதனால் வங்கிப் பரிவர்த்தனைகளின் அளவில் குறைபாடு ஏற்பட்டது. வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

1,772 கோடி அபராதம்:
பலராலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை. இந்த காரணத்தினால் கடந்த 2017 ஏப்ரல் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை மட்டும், வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.1,772 கோடியை அபராதம் வசூலித்துள்ளது இவ்வங்கி.

மக்கள் கருத்து:
குறைந்தபட்ச இருப்புத் தொகையை காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்கள் யாரென்றால் இந்தியாவின் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள். மல்லையாக்களிடம் இருந்து ஒரு நயா பைசாவை கூட வசூலிக்கத் திராணியற்று இருக்கின்றன இவ்வகை வங்கிகள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வங்கியின் முடிவு:
மக்களுடைய குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக குறைந்தபட்ச வங்கியிருப்பு தொகையின் அளவை குறைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மத்திய அரசும் இதற்குண்டான வேளைகளில் ஈடுபட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்