நடிகையர் திலகம்!- திரை விமர்சனம்!!

0
3125

நடிகையர் திலகம் சாவித்திரி காலத்தில் நீங்கள் பிறந்திருக்கவில்லையென்றாலும் கூட அவரைப் பற்றி அறியாமல் இருந்திருக்க முடியாது.

ஆணாதிக்கம் மிகவும் மேலோங்கியிருந்த அந்த காலத்திலேயே தனியொரு பெண்ணாய் நடிப்பில் எல்லாரையும் விழுங்கி கோலோச்சியது
மிகச் சிலர்தான். அதில் சாவித்திரியும் ஒருவர். அந்த மிகச் சிலரிலும் சாவித்ரிதான் மகுடம் வைத்த ராணியாக திகழ்ந்தார்.

அப்படிப்பட்ட சாவித்திரியின் மறுபக்கம் எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்காகத்தான் இந்த படம் “நடிகையர் திலகம்.”- நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்.

தெலுங்கிலும் தமிழிலுமாக எடுத்திருக்கிறார்கள். சாவித்ரி பெங்களூரில் கோமாவில் விழுகிறார். அவரை யாரென்று தெரியாமல் மருத்துவமனையின் நடைப்பாதையிலேயெ படுக்க வைக்கிறார்கள். பின்னர் தெரிய வந்ததும் ஊரே பரபரப்பு தொற்றியதுமாய் படம் ஆரம்பிக்கிறது.

கோமாவில் கிடக்கும் சாவித்ரியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக சமந்தா வருகிறார். அதன் பின் சாவித்ரியைப் பற்றி சமந்தா சேகரிக்கும் தகவல்கள் ஒன்றொன்றும் அவருக்கும் பிரமிப்பூட்டுகின்றன. நமக்கும்தான்.

நாம் அனைவருக்கும் சாவித்ரி குடித்து, குடித்து இறந்தார் என தெரிந்திருக்கும். ஆனால் நமக்கு தெரியாத அவரின் பல நற்குணங்களை இந்த படம் நம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்தில், குக்கிராமத்தில் பிறந்த சாவித்ரி தனது தந்தை இறந்த பின் ஆதரவில்லாமல் தனது பெரியப்பா வீட்டிற்கு அடைக்கலமாக வருகிறார். சிறு வயது சாவித்திரியாய் வரும் அந்த குட்டிப் பெண் தெலுங்கு கலந்த தமிழில் பேசுவது புதுமையாக இருந்தது சிறப்பு.

சுத்தமாக நடனமே வராத ஒரு பெண், பின்னாளில் நாட்டிய நாடகங்கள் செய்வதும். நடிக்கவே தெரியவில்லை என ஒதுக்கிய இயக்குனர் முன்பு எப்படி தனது நடிப்புத் திறமையை வளர்த்துக் கொண்டார் என்பதுதான் படமே.

இடையில் ஜெமினி கணேசனுடன் உருவாகிய காதல், மணம் எல்லாமே ரசனையாக இருந்தது. ஜெமினியின் மூலமாகத்தான் சாவித்ரியின் திறமையே உலகிற்கு தெரிய வருகிறது. பின்னாளில் இருவரும் காதலித்து மணம் புரிந்து, பின் சாவித்ரியின் புகழ்
உச்சத்திற்கு சென்று, பேரும் பணமும் செல்வாக்காய் மகுடம் சூடி வாழ்கிறார்.

அதன் பின் ஒன்றன்பின் ஒன்றாய் எல்லாம் இழந்து இறுதி நாட்களில் ஒன்றும் இல்லாமல் இறக்கிறார் எனது ஒரு மீளமுடியா சோகக் கவிதையின் முற்றுப் புள்ளி.

அவர் சென்ற பாதை அத்தனை எளிதல்ல.அவர் நின்ற உயரமும் அத்தனை எளிதல்ல. இவ்வளவு நல்லவரா என இந்த படம் பார்த்தபின்தான் தெரிகிறது. இன்னும் நிறைய விஷயங்கள் இந்த படத்தில் சொல்லாமல் மறைக்கப்பட்டிருக்கலாம். சொன்னால் இன்னும் படம் சோகமயமாக போகக் கூடும் என இயக்குனர் நினைத்திருக்கலாம்.

அப்படிப்பட்டவரின் வாழ்க்கையை பயோபிக்காக கொண்டு வந்த இயக்குனர் நாக் அஸ்வினுக்கு கண்டிப்பாக அப்ளாஸ் தர வேண்டும்.

கீர்த்தி சுரேஷ்! -அம்மாடி இப்படி ஒரு நடிப்பா என பிரமிக்க வைக்கிறார். சாவித்ரியின் ரோல் கச்சிதம். ஆனால் ஜெமினி கணேசனாக வரும் துல்கரின் தோற்றம் கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருந்தது. இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம்.

ரெங்காராவ் கேரக்டரில் மோகன்பாபு, நாகேஸ்வரராவ் கேரக்டரில் அவரது பேரன் நாக சைதன்யா, பத்திரிகையாளராக சமந்தா, அவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா என திரும்பின பக்கமெல்லாம் பிரபங்களின் முகங்கள். ஆனாலும் அவர்களின் பாத்திரங்களிய மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள்.

சாவித்ரியின் வாழ்க்கை நடு நடுவே சமந்தாவின் வாழ்க்கையை காண்பித்தபோது, இப்போ எதுக்கு இவர்களின் கதை என்று நினைக்கத் தோன்றியது. முழு நீள சாவித்ரியின் கதையை மட்டும் எடுத்திருக்கலாம். அதெல்லாம் சிறு குறைதான்.

மற்றபடி எல்லாரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.. இறுதியில் வாழ்க்கை என்பது இவ்வளவுதானா என எல்லாருக்கும் நினைக்கத் தோன்றும்.

SHARE