பெற்ற மகளுக்கு ‘ஆசிஃபா’ என பெயரிட்ட கேரள ஊடகவியலாளர்!

0
627

காஷ்மீரில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலையுண்ட சிறுமி ஆசிஃபாவின் நினைவாக, கேரளத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ரஜித் ராம் என்பவர் தான் பெற்ற பெண் குழந்தைக்கு அப்பெயரை சூட்டி பெருமை அடைந்துள்ளார்.

கத்வா கிராமத்தை சேர்ந்த ஆசிஃபா என்ற எட்டு வயது சிறுமி எட்டு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள். குதிரை மேய்த்துக்கொண்டிருந்த அவளை தூக்கிச்சென்று, கோயிலின் கருவறைக்குள் கட்டிவைத்து மூன்று நாட்களாக பலாத்காரம் செய்துள்ளனர். மயக்க மாத்திரைகள் கொடுத்தும், உடம்பில் சூடு போட்டும் அவளை வன்புனர்ந்துள்ளனர். ஒரு சிறுவன் உட்பட எட்டு அரக்கர்கள் அவளை சூறையாடியுள்ளனர். ரணத்தை தாங்க முடியாமல் ஆசிஃபா இறந்து போனாள். அவளது சடலத்தை காட்டுக்குள் விட்டெறிந்துவிட்டு சென்றுள்ளன அந்த மிருகங்கள்.

இந்த சம்பவம், ஆசிஃபா மீதான நினைவலைகள் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியுள்ளன. அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் பெற்றுள்ளது இந்த செய்தி.

கடந்த பிப்ரவரி நான்காம் தேதியன்று, கேரள மாநிலத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ரஜீத் ராம் என்பவருக்கு, ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ஆசிஃபா என பெயரிட விரும்பி இருக்கிறார் ராம். ஆசிஃபா குறித்த செய்திகள் வீரியம் அடைய, தனது மனைவி மற்றும் உறவினர்களின் சம்மதத்துடன் தனது குழந்தைக்கு ஆசிஃபா என பெயர் சூட்டி பெருமை அடைந்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான தகவலை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். சில மணி நேரங்களிலேயே இப்பதிவு பல ஆயிரம் லைக்குகள், ஷேர்களை அள்ளிவிட்டது.

இச்செய்தியை காணப்பெறும் ஒவ்வொருவரும் ரஜித் ராமுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அள்ளி இறைத்து வருகின்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது மகள் சாதி, மதம் என அனைத்து பிரிவினைகளையும் கடந்து வாழ வேண்டும். இது பிரிவினை சக்திகளுக்கு அப்பாற்பட்டு எடுத்த ஒரு முடிவு’ என தெரிவித்துள்ளார்.

SHARE