என் காதலே என் தாயின் உயிரை பிரிக்கும் என்று நான் நினைக்கவில்லை – உண்மை கதை!

நான் அப்போது என்னுடைய கல்லூரி படிப்பிற்காக திருச்சியில் இருந்தேன்.. எனக்கு பொறியியல் படிக்க அங்கு தான் இடம் கிடைத்தது. நாங்கள் தனியாக ஒரு அறை எடுத்து தங்கியிருந்தோம்.. கல்லூரிக்கு பேருந்தில் செல்வது தான் வழக்கம்.. அப்படி ஒரு நாள் பேருந்திற்காக நின்று கொண்டிருக்கும் போது தான் அவளை சந்திக்கும் ஒரு சூழ்நிலை உருவானது..!

அவளை காண்பதற்காகவே எப்போதும் சரியான நேரத்திற்கு புறப்பட்டு பஸ் டாப்பிற்கு வந்து நின்று விடுவேன்.. எனது காலை பொழுதுகள் அவளை காண்பதற்காகவே விடிந்து கொண்டிருந்தன… அவளது தோழி மூலமாக தூது அனுப்பி அவளுடன் பேச ஆரம்பித்தேன்..

அவளுடன் பேசியதன் மூலமாக, அவள் பள்ளி படிப்பினை மட்டுமே முடித்தவள், அவளுக்கு அம்மா இல்லை.. அப்பா மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.. தனது அப்பாவை அவள் தான் பார்த்துக் கொள்கிறாள்.. உடன் அவளது பாட்டி இருப்பதாகவும் தெரியவந்தது.. நன்றாக படிக்க கூடியவள் அவள்.. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள்.. எனக்கு அவளது கதையை கேட்டதும் அவள் மீது மரியாதையும், காதலும் அதிகரித்தது..

அத்துடன் சேர்த்து அவளிடம் காதலை சொல்வதற்கான எனக்குள் இருக்கும் பயமும் அதிகரித்தது.. கஷ்டப்பட்டு சம்பாரித்து 18 வயதில் தன் குடும்ப பாரத்தை சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் என் காதலை எப்படி சொல்ல முடியும்?

அவளுடன் ஒரு கண்ணியமான நண்பனாகவே பழகி வந்தேன்.. அவளும் என்னுடன் ஒரு தோழியாக தான் பழகி வந்தாள்.. மிகவும் நல்லவள்.. நாட்கள் உருண்டோன.. எனது கல்லூரியின் கடைசி நாள் அன்று.. இன்று எப்படியாவது காதலை சொல்லியாக வேண்டும் என்று சென்றேன்.. வாழ்வா.. சாவா..? என்ற நிலை அது..! என்னால் அன்று நான் அடைந்த பதட்டத்தை வேறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது..

ஆனால் என்னால் அவளுடன் அன்றைக்கு பேசவே முடியவில்லை.. எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.. காதலை சொல்லமலேயே எனது சொந்த ஊருக்கு சென்று விட்டேன்.. எனக்கு சென்னையில் வேலை கிடைத்தது.. நல்ல வேலை.. 10 ஆயிரம் சம்பளம்.. வாழ்க்கை நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.. எனக்கு அவளின் நினைவுகள் எப்போதும் மறக்கவில்லை…

எனக்கென அப்போது ஒரு செல்போன் இல்லை.. அவளுடன் பேசவும் எந்த போனும் கிடையாது.. எனது முதல் மாத சம்பளத்தில் தான் நான் செல்போன் வாங்கினேன்.. அவளது பிறந்தநாள் அப்போது வந்தது என்பதால், அவளுக்கும் சேர்த்து போன் வாங்கிக் கொண்டு சென்று அவளுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தேன்.. அவள் வாங்க மறுத்தாள்.. நீண்ட போராட்டத்திற்கு பிறகு என்னிடம் இருந்து போனை வாங்கிக் கொண்டாள்..

அன்று தான் அவளே என்னிடம் காதலை தெரிவித்தாள்.. அவள் காதலை தெரிவித்த விதம் அழுகை… நீண்ட நேரம் தேம்பி தேம்பி என்னை கண்டு அழுதாள்.. ஏன் என்று கேட்டதற்கு, உன்னை பார்க்காமல், பேசமால் என்னால் ஏனே இருக்க முடியவில்லை.. என் மனது ரொம்ப வலிக்குது.. என்னால முடியலனு கதறி அழுதாள்.. என் கண்ணிலும் கூட கண்ணீர் உள்ளது என்பதை நான் அன்று தான் உணர்ந்தேன்..

மிகவும் மகிழ்ச்சியான நாள் அன்று… முகம் நிறைய சந்தோஷத்துடன் வீடு திரும்பினேன்.. அடிக்கடி போனில் பேசிக் கொள்வது ஆறு மாதத்திற்கு ஒரு முறை சந்தித்துக் கொள்வது என்று எங்களது காதல் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது..

எங்களது காதல் கதை என் அம்மாவிற்கு எப்படியோ தெரிந்துவிட்டது.. அவர் கொதித்து போனார்.. அவளை விட்டு விடு என்று என்னிடம் அவர் கூறாத நாள் இருக்காது.. என் அம்மா திடீரென ஒருநாள் உனக்கு 28 வயதாகிறது.. நான் உனக்கு பொண்ணு பார்த்து வைத்திருக்கிறேன்.. நல்ல பணக்கார சம்மந்தம் என்று என்னிடம் கூறினார்.. எனக்கு விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டேன்..

என் அம்மாவிற்கு அந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தே ஆக வேண்டும் என்று இருந்தது.. அம்மா, நான் 8 வருசமா அவளை காதலிக்கிறேன்.. என்னால் அவளை எப்படி மறக்க முடியும்? என்றேன்.. அவளுக்கு யார் இருக்காங்க.. படிச்சு இருக்கறாளா? அப்பா பைத்தியம், அம்மா இல்லை.. இப்படி ஒருத்தி உனக்கு எப்படி பொருத்தமா இருப்பா? எல்லாரும் நம்ம குடும்பத்தை பத்தி என்ன பேசுவாங்கனு அடுக்கிட்டே போனாங்க…

அதுமட்டுமல்ல, திருச்சிக்கு போய் எங்க அம்மா, அந்த பொண்ணையும் அவங்க குடும்பத்துகிட்டயும் பேசி இருக்காங்க.. அதுனால அவங்க ஊர விட்டு போய்ட்டாங்க… இது எல்லாம் தெரிஞ்சு நான் என் அம்மாவை திட்டினேன்.. அன்று நாள் முழுக்க சண்டை… நீ நான் சொல்லற பொண்ண கல்யாணம் பண்ணிக்கலனா, நான் செத்து போயிடுவேனு சொன்னாங்க… மிரட்டராங்கனு தான் நெனச்சேன்… உண்மையாவே அன்னைக்கு அவங்க தூக்கு போட்டு இறந்துட்டாங்க..

எனக்கு பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிடுச்சு… என்னை பெத்து வளத்துன என் அம்மாவின் சாவுக்கு நானே காரணம் ஆகிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி என்னை நிம்மதியா விடல.. என் சூழ்நிலை உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.. இப்படி ஒரு சூழ்நிலையில என்னால நான் காதலித்தவளை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? 8 ஆண்டுகளாக காதலித்தவளை மறந்துவிட்டு என்னால் எப்படி இன்னொருத்தியை திருமணம் செய்து கொள்ள முடியும்? எனக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்…!

SHARE