உலகின் முதலினம் தமிழினம்: ஆதாரப்பூர்வமான தகவல் கிடைத்தது!

0
1484

உலகில் தோன்றிய முதல் மனிதனின் கலப்பற்ற நேரடி வாரிசு, உசிலம்பட்டியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழன் விருமாண்டியே. உலக மரபணு ஆய்வாளர்கள் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் கூடி, இந்த ஆராய்ச்சி முடிவை அறிவிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆதிமனிதனின் மரபணுவை (எம் 130) கொண்டிருக்கும் விருமாண்டியை நேரில் சந்திப்பதற்காக, மதுரையிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள சோதி மாணிக்கம் என்ற கிராமத்திற்குச் சென்றோம். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அழகிய கிராமம் சோதி மாணிக்கம். ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும் நிறைந்த செம்மண்பூமி வீட்டருகே தோட்டத்தில் இளநீர் வெட்டிக்கொண்டிருந்தார் விருமாண்டி.

கேலியும் கிண்டலும்:
இந்த 7 ஆண்டாக நானும் என் குடும்பமும் சந்திச்ச அவமானங்களுக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் இப்பதான் விடிவு கிடைச்சிருக்கு” மனம் திறந்து பேசத் துவங்கிய விருமாண்டி. நமக்கும் ஓர் இளநீரைக் கண் திறந்து நீட்டினார். “முதல்ல இதைக் குடிங்க அப்புறம் பேசலாம்” என்றவர் தன் தந்தை ஆண்டித்தேவரையும் தாய் அமராவதியையும் நமக்கு அறிமுகப்படுத்தினார். மனித குல மரபணு மற்றும் காசநோய் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்த மதுரைக் காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிச்சையப்பன் குழுவினர் 1996ஆம் ஆண்டில், உசிலம்பட்டித் தேவர் கல்லூரி மாணவர்கள் சிலரின் குருதியை ஆய்வு செய்தனர்.

M130 மரபணு:
“மற்ற மாணவர்களைப் போல, ஏதோ ஆராய்ச்சி செய்றாங்க என்ற எண்ணத்தோடுதான் நானும் குருதி கொடுத்தேன். 5 ஆண்டு கழிச்சுதான் முடிவு வந்திச்சு. எம் 130 என்கிற மரபணு உன் உடம்புல இருக்கு. இதுதான் உலகில் தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணுன்னு சொன்னாங்க. எனக்கு முதல்ல ஒண்ணும் புரியலை. ஆனால் அக்கம் பக்க மக்கள் சொந்தம் சுறுத்துக்கள் எல்லாரும் நம்ம விருமாண்டி உடம்புல குரங்கு ரத்தம் ஓடுதாம். நம்ம விருமாண்டி ஆப்பிரிக்காகாரனுக்குப் பிறந்தவனாம் னு ஆளாளுக்கு ஆள் ரொம்ப கேவலமா பேச ஆரம்பிச்சாங்க” நெற்றியில் வழிந்த வியர்வையை வழித்தபடி தன் பெற்றோரைப் பார்த்தார் விருமாண்டி.

விருமாண்டியின் தாய்:
விரல்களால் வகிடெடுத்து வாரி முடித்த கொண்டை, கல் பதித்த இரட்டை மூக்குத்தி. வரப்பில் உட்கார்ந்தபடி பேசத் தொடங்கினார் விரமாண்டியின் தாய் அமராவதி. “நான் பெத்த மகன் உடம்புல அவன் அப்பன் ரத்தம் தானே ஓடணும். அவன் பாட்டன்… முப்பாட்டன் ரத்தம் தானே ஓடணும்… ஒரு பிறமலை கள்ளனுக்குத் தான் நான் புள்ளைப் பெத்தேன். ஆனா ஊர்ல இருக்கிற பலபேரும் என் காதில படுற மாதிரி டேய் கொரங்குக்குப் புள்ளைப் பெத்தவ போறாடா. ஆப்பிரிக்கக் கறுப்பனுக்கு புள்ளைப் பெத்தவ போறாடானு பேசுனாங்க. எப்பிடி இருக்கும் இந்தக் கள்ளச்சி மனசு? என்ன பாடு பட்டிருப்பேன்… யாரு பேச்சையும் நம்பிறாதீய. அந்த பதினெட்டாம்படியான் மேல சத்தியம் பண்ணிச் சொல்றேன். உங்களுக்குப் பொறந்த மகன் தான் விருமாண்டி. அப்பிடீன்னு எம்புருஷன்கிட்ட எத்தனை நாள் சண்டை போட்டிருப்பேன்… அப்பாடா… இப்ப அந்த அமெரிக்க விஞ்ஞானி வந்து சொன்ன பிறகுதான் நானும் என் குடும்பமும் தலைநிமிர்ந்து நடக்கிறோம்” விருமாண்டியின் தாய் அமராவதியின் முகத்தில் இப்போது பெருமிதம் மின்னுகிறது.