என் காதலி செய்த அந்த ஒரு தவறை மட்டும் என்னால் மன்னிக்கவே முடியாது! – உண்மை கதை!

என்னுடைய பெயர் விக்னேஷ், நான் பள்ளிப்பருவத்தில் இருந்தே ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் இந்த வயதில் நான் காதலை வெளிப்படுத்தினால் அது தவறாக போய் விடும் என்று நினைத்தோ அல்லது அவளிடம் காதலை வெளிப்படுத்த பயந்தோ அவளிடம் கல்லூரி காலம் முடிந்து தான் என்னுடைய காதலை வெளிப்படுத்தினேன்…!

அவளுக்கும் என் மீது பள்ளிப்பருவம் முதலாகவே ஒரு ஈர்ப்பு இருந்த காரணத்தினால் அவள் என்னை ஏற்றுக் கொண்டாள்.. எனக்கு கல்லூரி முடித்து 6 மாதம் கழித்து தான் வேலையில் சேர வேண்டிய நிலை இருந்தது.. ஆனால் அவளுக்கு கல்லூரி முடித்த உடனேயே வேலை கிடைத்து விட்டது.

வேலை இல்லாத அந்த ஆறு மாதங்கள் எனக்கு கடுமையாக இருந்தது. அப்போது எல்லாம் எனக்காக என் காதலி வினோதினி தான் பணம் செலவு செய்வாள். எனக்கு பணம் செலவு செய்யும் போது கணக்கு பார்க்காமல் செலவு செய்வாள்.. அவளால் தான் நான் அந்த வேலை இல்லாத 6 மாதங்களை கழித்தேன்.

அதன் பிறகு, எனக்கும் ஒரு நல்ல வேலை கிடைத்தது.. எனக்கு வேலை கிடைத்த உடன் அவளது ஆசைகள் அனைத்தையும் நான் நிறைவேற்ற ஆரம்பித்தேன்.. எனது சின்ன சின்ன சந்தோஷங்கள் அத்தனையிலும் என்னுடைய வினோதி தான் நிறைந்திருந்தாள்..

 

எனக்கு எந்த ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் நான் அவளிடம் தான் கருத்து கேட்பேன். அவள் சற்று யோசித்தாலும் கூட அது எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும் நான் அதனை செய்யவே மாட்டேன்.

பொதுவாக அனைத்து ஆண்களுக்குமே தங்களுக்கு வரப்போகும் மனைவி இன்னொரு அம்மாவாக இருக்க வேண்டும். தங்களுக்கு அறிவுரை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது என்று தான் நான் சொல்வேன்.. அந்த அளவுக்கு வினோதினி புத்திசாலி, அறிவானவள்.. எங்களுக்குள் எந்த பிரச்சனை வந்தாலும் இருவரும் பேசி அதனை சுமூகமாக கொண்டு செல்வோம்..

எனவே நாங்கள் இருவரும் சேர்ந்து காதலித்த 5 வருடத்தில் எங்களுக்குள் எந்த விதமான மன கசப்புகளும் வரவில்லை.. ஒரு நாள் நமது காதல் பற்றி வீட்டில் பேசி சம்மதம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தோம்..

நான் காதலை பற்றி எங்களது வீட்டில் சொன்ன போது, எனது அப்பா அதனை பயங்கரமாக எதிர்த்தார். என் மனம் சங்கடப்படும் படியாக நடந்து கொண்டார். குடிப்பழக்கமே இல்லாத என் அப்பா, நன்றாக குடித்து விட்டு வீட்டிற்கு வர ஆரம்பித்தார்.. ஒரு சில நாட்கள் வீட்டிற்கே வரமாட்டார்.

இதனை எல்லாம் பார்த்து என் அம்மா அழுது புலம்புவார்.. எனக்கு வீட்டிற்கு சென்றாலே இது போன்ற வேதனைகள் தான்.. ஒரு நாள் நான் என் அப்பாவிடம் ஏன் உங்களுக்கு அவளை பிடிக்கவில்லை? அவள் உங்களது நண்பரின் மகள் என்ற காரணத்தினாலா என்று கேட்டேன்.. (வினோதியின் அப்பாவுன் என்னுடைய அப்பாவும் முதலில் நண்பர்களாக இருந்தனர்.. மனகசப்பினால் பிரிந்துவிட்டனர்) எனது அப்பா அதற்கு அது எல்லாம் எனக்கு தெரியவில்லை.. எனக்கு பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை தான் என்று கூறிவிட்டார்..

எனக்கு என் வீட்டில் நடப்பதை எல்லாம் பார்த்து, பார்த்து இந்த காதலை விட்டு விடலாமா என்று தோன்றிவிட்டது. நான் வினோதியிடம் நீ என்னை விட்டு போய்விட்டால் எல்லா பிரச்சனைகளும் முடிந்து விடும் என்று கூட கூறியிருக்கிறேன். ஆனால் வினோதியின் வீட்டில் மட்டும் பிரச்சனைகள் இல்லை என்று கூறிவிட முடியாது. அவளது வீட்டிலும் பிரச்சனைகள் இருந்தன.

ஒருநாள் என்னுடைய அப்பா, நான் பார்த்து வைத்திருக்கும் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள். அல்லது நான் தீக்குளிப்பேன் என்று நின்றுவிட்டார்.. செத்து தொலையுங்கள் என்று நான் வீட்டை விட்டு வெளியே கிளம்பிவிட்டேன்..

அதன் பின்னர் நான் வினோதியிடம் வந்து, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ முடியாது. எனது அப்பா நம்மை திருமணத்திற்கு பிறகு ஏற்றுக் கொள்ள மாட்டார். அவர் தனது சொந்த தங்கை மற்றும் அக்காவிடமே 30 ஆண்டுகளாக பேசாமல் இருந்து வருகிறார். அவருடைய வைராக்கியத்தை நம்மால் ஜெயிக்க முடியாது..

அப்படியே நான் உன்னை திருமணம் செய்து அந்த வீட்டில் கொண்டு போய் வைத்தாலும், நான் வேலைக்கு சென்று வீடு திரும்பும் வரையில் உன்னை அவர்கள் என்ன செய்தார்களோ..

என்ன செய்தார்களோ என்று தவித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். இதனை நான் உன் மீது உள்ள காதலினால் தான் கூறுகிறேன் என்று தெளிவாக அவளுக்கு புரிய வைத்தேன்.. அவள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு போய்விட்டாள்.. நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற அவளது வார்த்தையின் அர்த்தம் எனக்கு அப்போது புரியவில்லை..

ஒருநாள் என் அப்பா சோபாவில் அமர்ந்து இருந்த என்னை திடீரென அடித்து கீழே தள்ளினார்.. அடப்பாவி இப்படியே பண்ணீட்டியே என்று என்னை அடி அடி என்று அடித்தார்.. நான் கிழே விழுந்ததில் சற்று நிலை தடுமாறி போனேன்.. அதில் இருந்து மீள என் அப்பாவின் கைகளை உதரி விட்டேன்.. இதனால் அவர் கிழே விழுந்தார்.

அது நான் அவரை அடித்தது போல ஆனது. நிச்சயம் வேண்டாம் என்று பெண் வீட்டிற்கு போன் செய்து சொல்லிவிட்டு இப்போ என்னையும் அடிக்கறீயா என்று கேட்ட போது தான்.. இந்த வேலையை செய்தது வினோதி தான் என்று அறிந்தேன்..

அவள் பெண் வீட்டிற்கு போன் செய்து, நானும் விக்னேஷ்-ம் 10 வருடங்களாக காதலித்து வருகிறோம். நாங்கள் திருமணமும் செய்து கொள்ள இருக்கிறோம்.. நீங்கள் உங்களது பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்தால், நான் அந்த திருமணத்தில் வந்து பிரச்சனை செய்வேன் என்று மிரட்டியிருக்கிறாள்..

இந்த விஷயம் ஊருக்குள் நானும் வினோதியும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து விட்டோம் என்பது போல பரவியது. ஊருக்குள் தினமும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசுவதாக என் அப்பா தினமும் வந்து ஒவ்வொரு விஷயத்தை கூறுவார்.. அவை எல்லாம் எங்களது குடும்பத்தை சீரழித்துக் கொண்டிருந்தது.

நான் வினோதிக்கு போன் செய்யும் போது, அவள் எனது போனை எடுக்க மாட்டாள்.. அவள் செய்யும் போது நான் அவள் மீது உள்ள கோபத்தில் போனை எடுக்கமாட்டேன்.. இப்படியே ஆறு மாதங்கள் கடந்தன. அப்போது வினோதிக்கு நிச்சயதார்த்தம் மட்டும் முடித்துவிட்டதாக எனக்கு ஒரு தகவல் கிடைத்தது.. அதனை கேட்டவுடன், எனக்கு அவள் மீது கடும் கோபம் வந்தது… அவள் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டு போக தயார் என்றால், எனது வாழ்க்கையை ஏன் கெடுத்தாள்..?

என் நிச்சயத்தை நிறுத்தியவள் எனக்காக காத்திருந்திருக்க வேண்டும் அல்லவா? அவளுக்கு அவளது வீட்டில் என்ன பிரச்சனையோ தெரியாது.. ஆனால் என் வாழ்க்கையை கெடுத்தது அவள் செய்த மன்னிக்க முடியாத குற்றம்.

அவள் திருமணம் செய்து கொண்டு, கூப்பிட்டால் கேட்கும் தொலைவில் தான் இருந்தாள். திருமணம் செய்து கொண்ட தனது முன்னால் காதலியை பார்த்துக் கொண்டே வாழ்வது எவ்வளவு கொடுமையான வாழ்க்கை…? அதனை நான் தினம் தினம் அனுபவித்தேன்.. மேலும் எனக்கு யாரும் பெண் தரவில்லை.. என் அப்பா மற்றும் அம்மா பெண்ணின் புகைப்படத்தை காட்டினாலே எரிச்சல் அடைவேன்..

பெண் கேட்ட இடங்களில் எல்லாம், உங்களுக்கு ஏற்கனவே நிச்சயம் வரை சென்று கல்யாணம் நின்றுவிட்டதாமே என்றும் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று சொன்னார்களே என்றும் என் மனதை நோகடித்தனர். என் அப்பாவுடன் நான் 5 ஆண்டுகளாக பேசவே இல்லை.. எனக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும் போது தான் பேசினேன்.. எனக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகின்றன.

காதலில் ஏதோ சில காரணத்திற்காக, இருவரும் பிரிய நேர்ந்தால் அன்று முதல் அவரை விரோதியாக பார்க்காமல் என்றைக்கோ ஒருநாள் இவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தானே இருந்தோம் என்ற மனப்பான்மையில் பார்க்கலாமே..!

உங்களை விட்டு விட்டு அவர் இன்னொருவருடன் வாழும் போது அவரை பழிவாங்க நினைக்காமல், அவரது வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்துவது என்பது ஏமாற்றுத்தனம் அல்ல.. அதன் பின்னால் தான் உண்மையான காதல் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்….!

இப்படிக்கு
விக்னேஷ்..!

SHARE