அழகுதானே போனது… நீ போகவில்லையே… ஐ லவ் யூ சுனிதா!

0
962

சாலை விபத்தில் சிக்கி தன் பொலிவை இழந்த காதலியை அதீத காதலுடன் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்த பெங்களூரு இளைஞருடைய காதல் கதை நம்மை வியக்க வைக்கிறது.

பெங்களூரு டூ கோவை:
பெங்களூருவை சேர்ந்த இளைஞரான ஜெயப்பிரகாஷ், விபத்தில் முக அழகை பறிகொடுத்த தனது தோழியை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டுள்ளார். ஜெயப்பிரகஷும் அவரது பள்ளி தோழியான சுனிதாவும் படிக்கும் பருவத்தில் இருந்தே ஒருவரை ஒருவர் தோழராக ஏற்றுக்கொண்டு பழகி வந்துள்ளனர்.

 

திடீர் விபத்து:
ஒருமுறை சுனிதா கோவைக்கு வந்து செட்டில் ஆகி விட, இருவருக்கும் இடையே ஆன நெருக்கம் அதிகரித்து காதலாக பூத்துக் குலுங்கியது. கடந்த 2011ல் கோவையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் சிக்கினார் சுனிதா. அதில் அவருடைய தலைப்பகுதி மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. அவரது தலையின் வடிவமே கூட மாறிப் போயிருந்தது. மேலும் அவரது கண்கள் சுருங்கிப் போயிருந்தன. உருவத்தால் உருக்குலைந்து போயிருந்த சுனிதாவைக் கண்டு கதறி அழுதார் ஜெயப்பிரகாஷ்.

 

நீதான் எந்தன் காதலி:
இதுதான் தனது காதலுக்கு காலம் இட்ட கட்டளை, இதைதான் இறைவனும் நமக்கு விதித்துள்ளான் என தன்னைத்தானே தேறிக்கொண்டு, சுனிதா மீதான காதலில் எள்ளளவும் குறையாமல், சுனிதாவை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை தொடங்கிட விரும்பினார். அப்போதுதான் சுனிதா மீதான காதலும், அக்கறையும் அவருக்கு பல மடங்கு அதிகரித்திருந்தது.

 

அழகான திருமணம்:
சுனிதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் இனிதாய் நடந்தேறியது. திருமணத்திற்கு பின்பு சுனிதாவை ஒரு குழந்தையைப் போல பார்த்துக்கொண்டிருக்கிறார் ஜெயப்பிரகாஷ். பல வருட சிகிச்சைகளுக்குப் பிறகு ஓரளவு குணமானவுடன், இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினர். ஜெயப்பிரகாஷ் தன் மீது கொண்டிருந்த உண்மையான காதலுக்கு பரிசாக, அத்மியா, அத்மிக் என இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார் சுனிதா.

இப்போது இந்த தம்பதிகள் குழந்தை வளர்ப்பில் பிஸியாக இருக்கின்றனர். அன்பும், பாசமும் நிறைந்த குடும்பமாக இவர்களது குடும்பம் திகழ்கிறது. உண்மையான காதல் உள்ள இடமே மகிழ்ச்சியான இடமாக அமையும் என்பதற்கு இந்த தம்பதிகளே சான்று.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்