கல்லீரலை காக்கும் அஞ்சு இலை குழம்பு தெரியுமா?-கிராமத்து சமையல்!!

0
14

நிறைய நேரம் சமையலறையில் புகுந்து கொண்டு பலவித காய்கறிகளை சமைத்து
சாப்பிட வேண்டுமென்பது இல்லை. நாம் சமைக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது சாமார்த்தியமான அணுகுமுறை. வெறும் சில
நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடிய குழம்பு வகைகள், துவையல், பொறியல்
போன்றவற்றை செய்யத் தெரிந்து விட்டால் எளிமையாகவும், அதே சமயம் சத்தாகவும்
உடலுக்கு சேரும். நேரமும் குறைவு.

சமீபமாக நடந்த ஒரு ஆராய்ச்சியில் 90 வயதுக்குரியவர்களின் சாப்பாட்டு முறையை
ஆராய்ந்த போது, அவர்கள் எளிமையான ஒரே மாதிரி ரொட்டீன் உணவுகளை சாப்பிட்டு
வந்தது தெரிய வந்துள்ளது.

எனவே விதவிதமாக சாப்பிட வேண்டுமென்பதில்லை. நல்ல அதேசமயம் எளிமையான உணவுகளிய சாப்பிட்டாலே தெம்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம். அவ்வகையில் இன்று அஞ்சு இலை குழம்பு செய்வதைப் பற்றிப் பார்க்கலாம்.

அஞ்சு இலை என்பது மணத்தக்காளி, கருவேப்பிலை, கொத்துமல்லி, வெங்காயத்தாள்
மற்றும் புதினா ஆகியவற்றை சேர்த்து செய்வது. எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை :

மணத்தக்காளி கீரை,
கறிவேப்பிலை,
புதினா,
கொத்தமல்லித்தழை,
வெங்காயத்தாள்
(இந்த ஐந்தும் சேர்த்து ஒரு கப்)
புளி – சிறிதளவு,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3,
பெருங்காயத்தூள்,
கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

ஸ்டெப்-1

மணத்தக்காளி கீரை, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள்
ஆகியவற்றை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். கழுவி வைத்த 5 கீரைகளை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப்-2 :

பின்னர் புளி, உப்பு சேர்த்து மிக்ஸி யில் அரைக்கவும். அரைத்த விழுதில் தண்ணீரை (ஒன்று அல்லது ஒன்றரை டம்ளர்) கலக்கவும்.

 

ஸ்டெப்- 3 :

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், வெந்தயம் தாளித்து,
அரைத்த கலவையை அதில் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு, இறக்கிப் பரிமாறவும்.இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

நன்மைகள் :

வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நல்லது. கல்லீரலுக்கு பலம் தரும். அஜீரணம்,
நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. புண்களை ஆற்றும். வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். கால்சியம் நிறைந்தது. எலும்புக்கு வலு சேர்க்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

SHARE