செப்டம்பர் வரை ஜோராக மழை வரும்: தமிழ்நாடு வெதர்மேன்!

0
753

தமிழகத்தில் கடந்த 50 வருடங்களில் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம்தான் சிறப்பான மழைப்பொழிவை பெற்றுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில், கடந்தாண்டு பருவமழை பெய்திருந்தாலும், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில், தென்மேற்கு பருவமழையும் சுமாராகவே இருந்தது.

ஆனால் ஆகஸ்ட் மாத மழைப்பொழிவு ஓரளவு அதிகமாகவே பெய்து வருவதாக வெதர்மேன் கூறுகிறார். கடந்த 150 வருடங்களில் 8வது அதிக மழையை பெற்ற மாதமாகவும் இம்மாதம் திகழ்கிறது. ஆகஸ்ட் துவக்கம் முதலே தமிழகம் முழுவதும் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக திருவண்ணாமலை, சிவகங்கை, பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்திய ஆண்டுகளில் அதிக மழையை பெற்ற மாவட்டங்கள் என்று கூறலாம்.

சென்னையை பொறுத்தவரை செப்டம்பர் மாத தொடக்கமே மலையோடு தொடங்கியிருப்பதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை நகரின் மேற்புறத்தில் அதிக மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதாகவும், இதனால் ஜில்லென்று மழை பொழியும் என்றும் வேதர்மேன் குறிப்பிட்டுள்ளார். தென்மேற்கு பருவக்காற்று ஆரம்பத்தில் ஏமாற்றினாலும், இறுதியில் கைக்கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

இன்னும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதுபோல மேற்கு கடற்கரை பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. இதே போல் அக்டோபரில் வரும் வடகிழக்கு பருவமழையும் கைக்கொடுத்தால் தண்ணீர் பஞ்சம் தீரும் என மக்கள் கருதுகிறார்கள்.

SHARE